Thursday, November 5, 2020
CPS - அலுவலகம் இடமாற்றம்!
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது.
வருகின்ற நவம்பர் 5- ஆம் தேதி முதல் CPS அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்) பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது.
சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் புதுப்பிப்பு
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளம், எட்டு ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதே முகவரியில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய இணையதள செயல்பாட்டை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் இணையதள வழிமுறைகளை பின்பற்றி, இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்களும், தமக்கு தேவையான விபரங்களை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும், பார்வையாளர்கள், தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை இணையதளம் வழியே வழங்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் 'ஆன்லைன்' குளறுபடியால் தவிப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 4,981 எம்.பி.பி.எஸ்., 1,760 பி.டி.எஸ்., படிப்பு இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை, மருத்துவக் கல்வி இயக்ககம் துவக்கியுள்ளது.
ரகசிய எண்
இதற்கு, www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதுபோன்று விண்ணப்பிக்கும் போது, பதிவு செய்யும் மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் வருகிறது.
ஏற்பதில்லை
அந்த ஓ.டி.பி., எண் அளித்தும், உள் நுழையாமல், தொழில்நுட்ப கோளாறு என, தகவல் கிடைக்கிறது.இது குறித்து புகார் அளிக்கவும், விண்ணப்பிப்பதில் எழும் சந்தேகங்களை கேட்கவும், மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள மொபைல் எண்களை தொடர்பு கொண்டால், யாரும் அழைப்பை ஏற்பதில்லை என, மாணவர்களும், பெற்றோரும் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
முயற்சி
இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:தமிழகம் முழுதும், ஒரே நேரத்தில், அனைவரும் விண்ணப்பிக்க முயற்சி செய்வதால், இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். இப்பிரச்னை வராமல் சரி செய்யப்படும். தகவல் மையத்தில் வரும் அழைப்புகளை ஏற்க, தேவையான அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.