Tuesday, September 4, 2018

அரசு பள்ளி மாணவர் சீருடை மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்வியாண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், நெமிலி அரசு உயர்நிலை பள்ளியில், புதிய கட்டட திறப்பு விழா, பூனிமாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலை பள்ளியாகவும், ஆதிவராகபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட விழாவும், நேற்று நடந்தது.
இதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்விஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடை மாற்றம் செய்யப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம், இலவச சைக்கிள், 'லேப்டாப்' வழங்கப்பட உள்ளது. 'நீட்' தேர்வுக்கு, 412 மையங்கள் ஏற்படுத்தி, பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டிற்குள், 3,000 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து, மாணவர்களுக்கு, கணினி பயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறையை போக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், அரி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நரசிம்மன், பலராமன், விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பவணந்தி உட்பட, பலர் பங்கேற்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில், அரசு பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

No comments:

Post a Comment