Monday, July 29, 2019

புதிய கல்விக்கொள்கையில் ஏன் இவ்வளவு ரகசியம்: ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

இந்த புதிய கல்விக்கொள்கையில் சர்ச்சையை கிளப்பக்கூடிய விஷயங்கள் இல்லாமல் இல்லை; தமிழக மாணவர்களை, குறிப்பாக ஏழை மாணவர்களை பாதிக்கக்
கூடியவை. இதற்கு முன் 7 முறை கல்விக்ெகாள்கை வகுக்கப்பட்டன. முதன் முதலில் 1948ல் முதல் கல்விக்கொள்கை அமலானது. காலத்துக்கு ஏற்ப அடுத்தடுத்து கல்விக்கொள்கை உருவானது; ஆனால், முழுமையாக அமலாகவில்லை. நீட்...டில் ஆரம்பித்து தமிழகத்துக்கு எப்படியெல்லாம் நெருக்கடி, முட்டுக்கட்டை தர முடியுமோ அந்த அளவுக்கு அடிக்கடி வெறுப்பேற்றுவது என்று மத்திய பாஜ அரசு தீர்மானமாக உள்ளதோ என்றுதான் அதன் நடவடிக்கைகள் உள்ளன. இதுதான் ஏழை மாணவர்களது பெற்றோரின் வேதனையாக உள்ளது. இந்த வரிசையில் சமீபத்தில் பயமுறுத்த வந்திருப்பது தான் புதிய கல்விக்ெகாள்கை.

அப்படி என்ன தான் ரகசியம் இதில்? வரைவு திட்டத்தை வெளியிட்டு கருத்து சொல்ல வேண்டுகோள் விடுக்கும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை, தமிழகத்தின் பல இடங்களிலும் ரகசியமாக கூட்டம் போடுவது தான் பலருக்கும் சந்தேகங்களை எழுப்புகிறது. புதிய கல்விக்கொள்கையால் இலவச கல்வி, தமிழ் வழிக்கல்வி, 8ம் வகுப்பு வரை எல்லாரும் தேர்ச்சி...இப்படி இதுவரை நடைமுறையில் இருந்தது எதுவும் இருக்குமா என்பது தெரியவில்லை. அந்த வகையில் ஏழைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியே. இதோ நான்கு கோணங்களில் அலசல்:

மாநில அளவில் விவாதித்து இறுதி செய்ய வேண்டும்பாலகுருசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்

நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து இதுவரை 7 முறை கல்விக்கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. 1948 முதல் 2019 வரை 7 கமிட்டிகள் அளித்த எந்த கல்விக்கொள்கையும் முழுமையாக அமல்படுத்தவில்லை, அதுதான் இங்கு பிரச்னையே. அதனால் இது பற்றி முழுமையாக சிந்திக்க வேண்டும்; பலதரப்பு மக்களை மனதில் வைத்து திட்டம் போட வேண்டும். பல்வேறு எதிர்ப்புகளால் எந்த கல்விக்கொள்கையும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. பிரச்னைக்குள்ளாகியுள்ள மும்மொழிக்கொள்கை என்பது 1968ம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக்கொள்கையிலேயே இடம்பெற்றிருந்தது. தமிழகத்தில் இந்திக்கு எதிர்ப்பு இருந்ததால், நாம் இந்தி படிக்கவில்லை. பிற மாநிலங்கள் மும்மொழிக்கொள்கையை அப்போதே ஏற்றுக்கொண்டன.

ஹூயூமன் டெவலப்மன்ட் இன்டெக்ஸ் என்ற ஒரு பட்டியல் மிக முக்கியமான ஒன்று. அதில் 190 நாடுகள் பட்டியலில் நம் நாடு 131வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வேதனையான விஷயம். 3 வயது முதல் 8 வயது வரை மாணவர்கள் எளிதாக கற்றுக்கொள்ள முடியும். அதனால் பள்ளி செல்லும் வயதை புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் 3 ஆக குறைத்துள்ளனர். ஏற்கனவே உள்ள பிரிவில் கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகியவற்றை ஒருங்கிணைத்தே தற்போது 3 வயதில் பள்ளிப்படிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பிளே ஸ்கூல்களில் 3-5 வயது வரை இருக்கும் குழந்தைகளை கவனிக்க போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை. அந்த நடைமுறையை புதிய கல்விக்கொள்கை தடை செய்கிறது.

2016ம் ஆண்டு டி.ஆர்.சுப்ரமணியன் கமிட்டி புதிய கல்விக்கொள்கையின் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த கமிட்டி வெளியிட்ட வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து கஸ்தூரி ரங்கன் கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்வி அறிக்கை ஒரு வரைவு அறிக்கை மட்டுமே. புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ள நல்ல விஷயங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாநில அளவில் ஒத்துவராத விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும். கல்விக்கொள்கை சிறப்பாக உள்ளது, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதுவே இறுதியல்ல. தமிழக மாணவர்களுக்கு ஏற்ப சில மாற்றங்கள் கண்டிப்பாக தேவை. 

புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை அமல்படுத்துவது கடினமான விஷயம், மாநில அளவில், மாவட்ட அளவில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இது. இதில் இடம்பெற்றுள்ளவை வழிகாட்டுதல்கள் மட்டுமே. அவற்றில் எவற்றை அமல்படுத்தலாம் என்பதை மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை பொது வெளியில் வெளியிடப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம்.

அதே போல், 1968ம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் சொல்லியுள்ளபடி, மொத்த ஜிடிபியில் 6 சதவீதத்தை பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு ஒதுக்க வேண்டும். மொத்த ஜிடிபியில் 2 சதவீதத்தை ஆராய்ச்சிக்காக ஒதுக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை அமல்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நிதியை செலவு ெசய்தால் மட்டுமே, நம் நாடு கல்வியில் மேம்படும்.

கல்வியில் மத்திய அரசு மூக்கை நுழைக்க கூடாது: சாலமன் பாப்பையா, தமிழறிஞர்

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களிடம் கருத்து கேட்டும் உள்ளது. ஆனால், வெளிப்படை தன்மை உள்ளதா என்றால் கேள்விக்குறிதான். இந்த கல்விக்கொள்கையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக தமிழக அரசு தான் மத்திய அரசிடம் கூற வேண்டும். மக்களுக்கு எதிரான, நலனுக்கு விரோதமான அம்சங்களை கண்டிப்பாக கைவிட வலியுறுத்த வேண்டும். நம் சார்பில், அதாவது தமிழக மக்களின் சார்பில் தமிழக அரசு தான் எதிர்க்க வேண்டும். நாம் ஒரு அரசை தேர்ந்தெடுத்துவிட்டோம். இன்னும் வேதனையான கருத்தாக சொல்ல வேண்டுமானால், காசு வாங்கி ஓட்டு போட்டு விட்டோம். அப்படிபட்ட அரசு என்ன செய்யும்? நமக்காக உள்ள அரசு என்று தான் ஓட்டு ேபாட்டோம்; ஆனால், அந்த அரசு நமக்கு எதிராக உள்ளது. இதுவரை பார்த்து கொண்டு தானே இருக்கிறோம். 

புதிய கல்வி கொள்கையில் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால், அதுபற்றி அரசாங்கத்திற்கு கவலை இல்லை. கல்வி மாநிலத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். அதில், மத்திய அரசு மூக்கை நுழைக்க கூடாது. கல்வி கொள்கைக்கு எதிராக நாம் போராட வேண்டும். ஆனால், இந்த அரசு போராடுபவர்களை சிறையில் அடைக்கிறது. மாணவர்கள் போராட்டம் நடத்தினால், அவர்கள் கலவரம் செய்கின்றனர் என்று அடித்து உதைக்கின்றனர். அவர்கள் யாரும் போராடக்கூடாது என்று எண்ணுகின்றனர். அதனால் தான் அடக்குமுறையை ஏவி அனைவரையும் கட்டுப்படுத்த நினைக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதை பற்றியும் கவலை இல்லை. அவர்களுக்கு ஆட்சியை காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாமோ அதை செய்து விட்டு போவார்கள். காலத்தை ஓட்டுவதையே கவனமாக பார்த்து கொண்டிருக்கின்றனர். அதனால், நாம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்தும் நமது கல்வி அமைச்சர் பேச மறுக்கிறார். அவருக்கு மக்கள் நலனை விட ஆட்சி தான் முக்கியமாக உள்ளது.

பிளஸ் 2 படித்து முடித்த பிறகு மாணவர்கள் நீட் தேர்வு போன்று தேர்வை எழுதினால் தான் அடுத்த கட்ட படிப்புக்கு செல்ல முடியும் என்ற நிலையை இந்த புதிய கல்வி கொள்கை ஏற்படுத்துகிறது. இது, ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பள்ளிகளில் 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்வு முறை என்பதை வைத்து பார்க்கும் போது யாரும் படிக்க கூடாது என்று நினைக்கின்றனர். ஏற்கனவே, பள்ளிகளில் ஒழுக்க கல்வி என்பதை எடுத்து விட்டனர். தற்போது தாய்மொழி கல்வி குறைந்து போய் விட்டது. இப்போது, தொழிற்கல்வியை கொண்டு வரப்போவதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டை ஒரு வழியாக முடக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதோ ஒரு திட்டத்தை வைத்துள்ளனர். மக்கள் எதுவும் பேசாதபடி அவர்கள் சொல்வதை கேட்டு விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். கல்வியாளர்கள் இதை ஒட்டுமொத்தமாக கூடி எதிர்க்க வேண்டும். 

பழைய கல்விக்கொள்கை முறை இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. புதிய முறைக்காக இப்படி ஒரு கொள்கை கொண்டு வர வேண்டும் என்பது இல்லை. நமது மாநில அரசாங்கம் கல்வியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். அவர்களது கருத்தை கேட்டு அதனடிப்படையில் சிறிது மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மாணவர்களுக்கு பயன் உள்ள வகையில் இந்த கல்விக்கொள்கை இருக்கும். 

இலவச கல்விக்கு வேட்டு வைப்பதா?: கோவை ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வி கொள்கையில் கல்வி என்பதே வேலைவாய்ப்புக்காகவே படிக்கிற மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வி என்பது வேலைவாய்ப்புக்காக அல்ல. கல்வியின் பயன்பாடு வேலைவாய்ப்பு. கல்வி கற்று தருவது ஒரு மனிதன் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். இப்போது வந்திருக்கிற கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் வேலை வாய்ப்புக்காக சொல்லப்பட்டிருக்கிறது. 

அத்தனை மக்களுக்கும், அவர்கள் விரும்பிய, திறமைக்கேற்ப எதிர்கால வளர்ச்சிக்கான வேலை வாய்ப்பு என்றில்லாமல் அரசாங்கம் ஒரு குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது போன்றும் உள்ளது. 3 வயதில் இருந்து 8 வயதிற்குள் அந்த குழந்தை பருவத்தில் அவர்கள் எதிர்காலத்தில் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது போன்று உள்ளது. 3வயதில் இருந்து 8 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா செய்கிற வேலை தான் தெரியும். 

அவர்களுக்கு இருக்கும் ஆற்றல் என்ன என்பதை அப்போது புரிந்து இருக்க வாய்ப்பில்லை. 17 வயது வரை அவர்களிடம் எந்த வேலையும் வாங்க கூடாது. 3வயதில் இருந்து 8 வயதிற்குள் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வது முரண்பாடு. அந்த வயதில் குழந்தைக்கு பெரிதாக மூளை வளர்ச்சி இருக்காது. இருப்பினும் அந்த வயதில் வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புவது வேறு எந்த நாட்டிலும் இல்லை. பள்ளியில் 3 வயது சேர்க்கப்பட்ட குழந்தை 100 சதவீதம் கல்லூரி வரை வருமா என்று பார்த்தால் வராது. ஒவ்வொரு கட்டத்திலும் படிக்கிற குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து தான் வரும். அது, ஒரு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செமஸ்டர். இது பெரிய சுமையைத்தான் உருவாக்கும். 

9ம் வகுப்பில் ஒரு தொழிலையே தேர்ந்தெடுக்க சொல்கின்றனர். மர வேலை செய்ய ஆசாரி, கட்டிட வேலை கொத்தனார், எலக்ட்ரீசியன், பிளம்பர் இது போன்ற வேலைகளை பள்ளிகளில் சொல்லி கொடுக்கப் போவதாக கூறுகின்றனர். அதில் ஒன்றை கற்று கொள்ள வேண்டும் என்கின்றனர். ஒரு பெற்றோர் தன்னுடைய குழந்தைகள் இதில் ஒரு வேலை பார்த்தால் கூட அந்த பிள்ளைகளை பெரிய அளவில் படிக்க வேண்டும். நல்ல உத்யோகத்திற்கு போக வேண்டும் என்று கருதுகின்றனர். பெற்றோர்கள் விரும்பினால் கூட மாணவர்களுக்கு அரசு அந்த வாய்ப்பை தராது என்பது தான் இந்த கொள்கை. இப்போது போல் 12ம் வகுப்பு படித்து நல்ல மார்க் எடுத்து, அதன் மூலம் கல்லூரிகளில் சேருவது போன்ற நிலை இனிமேல் இருக்காது. ஒவ்வொரு கல்லூரிகளில் மாணவர்களை நீட் தேர்வு நடத்தி தான் சேர்க்க போகின்றனர். அகில இந்திய அளவில் தான் அந்த தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அந்த தேர்விலும் கல்லூரி போவதற்கு தனியாக மருத்துவகல்லூரிக்கு சேர படிப்பது போன்று நுழைவு தேர்வுக்கும் படிக்க வேண்டிய நிலை ஏற்படும். இவையெல்லாம் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். 

இனி கல்வி மாநில உரிமை அறவே இருக்காது. மத்திய அரசு பாடதிட்டமாகத்தான் இருக்கும். அரசு தேர்வாணையம் போன்று தனி தேர்வு முறை உருவாக்கப்படும். எனவே, இந்த தேர்வு முறை வந்தால் நியாயமான முறையில் நடக்காது. இவ்வளவு பாதிப்புகள் புதிய கொள்கையால் ஏற்படும்.75 சதவீதம் ஏழை மாணவர்கள் உள்ள நாடு. ஒரு முறை படிக்கவே பெற்றோருக்கு வசதி இருக்காது. அந்த மாணவன் பெயிலாகி, பெயிலாகி படித்தால் படிப்பை நிறுத்த வாய்ப்புள்ளது. கல்வி கொள்கை கொண்டு வந்தால் இலவச கல்வி என்பது எதிர்காலத்தில் இருக்காது.

கல்வியின் எதிர்காலம் பயமாக உள்ளது: சமுத்திரக்கனி, இயக்குனர், நடிகர்

புதிய கல்விக் கொள்கை பற்றி யார் பேச வேண்டும்? யார் பேசக்கூடாது என்று சொல்லக்கூடாது. இங்கு அனைவருக்கும் சமமான கல்வி இல்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. அதுபற்றி ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் பயமாகவும் இருக்கிறது. இப்போது நான் மோகன்லால், சூர்யாவுடன் இணைந்து 'காப்பான்' என்ற படத்தில் நடிக்கிறேன். ஷூட்டிங்கில் திடீரென்று எனக்கு ஆங்கில வசனங்களை அதிகமாக கொடுத்துவிட்டார்கள். அதை சரிவர புரிந்துகொள்ளவும் முடியாமல், கேமரா முன் நின்று பேசவும் முடியாமல் தவித்தேன். எனவேதான் சொல்கிறேன், கிராமப்புற மாணவர்களுக்கு எளிதான களம் அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.
எல்லோருக்கும் ஒரேமாதிரி தேர்வு என்று சொல்லும்போது, அனைவருக்கும் ஒரேமாதிரியான, தரமான கல்வியைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியும். ஆனால், இப்போதுள்ள சிஸ்டத்தால் கிராமத்தில் படித்துவிட்டு பட்டணத்துக்கு வரும் என்னைப் போன்ற சராசரி மாணவர்கள், இங்குள்ள மாணவர்களுக்கு இணையாகப் போராடி படிக்க முடியவில்லை. தரமான கல்வி, அனைவருக்கும் ஒரே கல்வி, அதுவும் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான முன்னோட்டக் கல்வி தர வேண்டும் என்பது என் கருத்து.

7வது, 8வது வகுப்பு வரை தமிழ்வழியில் படித்துவிட்டு, 8வது வகுப்புக்கு பிறகு ஆங்கிலவழி பாடம் படிக்க வேண்டும் என்று சொல்லும்போது, அதிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற முக்கியமான பரீட்சைகளை எழுத முற்படும்போது ஏற்படும் பயத்தையும், பதற்றத்தையும் போக்க முடியவில்லை. 10ம் வகுப்பில் ஆங்கிலத்தில் 35 மார்க் வாங்கிய நான், கணக்கில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்க முடிந்தது. பிறகு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க வரும்போது, ஆங்கில ஆசிரியர்களைப் பார்த்தாலே பயந்து ஓட வேண்டியிருந்தது. காரணம், தொடக்கத்தில் இருந்தே தமிழ்வழியில் படித்து வந்ததுதான். கல்லூரியில் பி.எஸ்.சி மற்றும் சட்டம் படிக்கும்போது தமிழ்வழியில்தான் படித்தேன். ஆங்கிலம் என்றாலே பதற்றம் ஏற்படும். சக மாணவர்களுடன் போட்டி போட முடியாமல் திணற வேண்டியிருந்தது. 

தமிழ்நாட்டில் வெவ்வேறு தளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இங்குள்ளவர்கள் பேசுவது தமிழே இல்லை. கல்வியை தமிழில் கற்றுக்கொண்டு, ஆங்கிலம் என்றாலே என்னவென்று தெரியாமல் வளர்ந்து, பிறகு திடீரென்று போட்டி போட்டு தேர்வு எழுதுவது என்பது, எவ்வளவு கடினமான காரியம் என்று நான் உணர்ந்திருக்கிறேன். கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் உள்பட அனைவருக்கும் தரமான, ஒரேமாதிரியான கல்வியைக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே தேர்வு என்று சொல்லும்போது, கல்வியையும் ஒரேமாதிரி தருவதுதானே நியாயம்? 
ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்றால் அது சரியல்ல; இப்படிப்பட்ட கல்வி முறையால் ஏழை எளிய மாணவர்களால் உயரத்தை தொட முடியாது. இப்போதுள்ள பல தனியார் பள்ளிகளில், நேரடியாக நுழைவுத்தேர்வு எழுதுவதற்காகவே பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். இப்படிச் செய்தால், 1வது முதல் 12ம் வகுப்பு வரை படித்தது எல்லாம் வீண்தானா? இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் ேயாசித்துப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும். மாணவர்கள்தான் எதிர்கால சமுதாயத்தின் தூண்கள். வேலைசார்ந்த கல்வி, ஒரேமாதிரியான கல்வி, அதுவும் தரமான கல்வி, ஒரே பரீட்சை என்பது சாத்தியமாகும் நாளில்தான், மாணவர்களின் இருண்ட வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி பிறக்கும்.

No comments:

Post a Comment