கோவையில் 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு,
ஆட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைத்து, முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகளைத் ரத்து செய்து, 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனா வைரஸ் தாக்குதல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது தீவிரமடைந்து வருவதால், பள்ளிகளைத் திறப்பது குறித்து தற்போது தமிழக அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. செப்டம்பர் மாதத்துக்குப் பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டவுன்ஹால் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு இன்று காலை சில மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்தனர். அவர்களை 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு எழுதப் பள்ளி நிர்வாகம் அழைத்திருந்ததாக சமூக ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
நுழைவுத்தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து மாணவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறிய பெற்றோர்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி, தெற்கு வட்டாட்சியர் முருகன் ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சுமார் 50 மாணவர்களைப் பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, நடத்திய நுழைவுத் தேர்வையும் தடுத்து நிறுத்தினர். நுழைவுத்தேர்வு எழுதுவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் தெரிவித்தனர்.
ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு, சில தளர்வுகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மாணவர்களைத் திரளாக அழைத்து நுழைவுத் தேர்வு நடத்தியது அதிகாரிகளை அதிருப்திக்குள்ளாக்கியது. இது குறித்து ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்த அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, 'மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் வேறெந்த பள்ளிகளிலாவது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment