Sunday, September 23, 2018

தனியார் பள்ளிகளுக்கு நிர்வாக அனுமதி : மாவட்ட கல்வி அதிகாரிகள் வசூல் வேட்டை

தனியார் பள்ளிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கும் விவகாரங்களில், மாவட்டங்களில் வசூல் வேட்டை நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. பள்ளி கல்வி துறையில், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரங்களை
மாற்றியமைத்து, சமீபத்தில், பள்ளி கல்வித்துறை செயலகம் அரசாணை பிறப்பித்தது. எனவே, பெரும்பாலான நிர்வாக ரீதியான அதிகாரங்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ.,க்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதையடுத்து, தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர் நியமனம், அங்கீகாரம் புதுப்பிப்பு, கூடுதல் பாடப்பிரிவு அனுமதி போன்றவற்றுக்கு, சென்னைக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது.அதனால், டி.இ.ஓ., மற்றும், சி.இ.ஓ.,க்கள் அலுவலகத்தில், இதற்கான விண்ணப்பங்கள் குவிந்தன. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளிகளின் கோப்புகளை நகர்த்தாமல், பல அதிகாரிகள் கிடப்பில் போட்டு விட்டதாக, புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தேவையற்ற கேள்விகளை கேட்டு, துண்டுச் சீட்டு கொடுத்து அனுப்புவதால், பள்ளி நிர்வாகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில மாவட்ட அதிகாரிகள், விதிகளில் இல்லாத அம்சங்களுக்கு, தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு, அதன் வாயிலாக, வசூல் வேட்டை நடத்துவதாகவும், புகார் எழுந்து உள்ளது. அதிலும், பள்ளியை பார்வையிடுவதாக கூறி வரும் அதிகாரிகளை, சிறப்பாக கவனித்தால் மட்டுமே, கோப்புகள் நகர்வதாக கூறப்படுகிறது.இது குறித்து, நாகை, கடலுார், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த, தனியார் பள்ளி நிர்வாகிகள், சமீபத்தில், சென்னையில் உள்ள பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதேநிலை நீடித்தால், தனியார் பள்ளி சங்கங்கள் சார்பில், போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, 'தனியார் பள்ளிகளின் கோப்புகளுக்கு, லஞ்சம் கேட்பது தெரிய வந்தால், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment