Tuesday, October 23, 2018

2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்கும் பள்ளிகளின் உரிமத்தை மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்

2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகளே எடுக்க வேண்டும் என்று
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் பள்ளி குழந்தைகளின் புத்தக சுமையை குறைப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது. இந்த உத்தரவை நாடு முழுவதும் தீவிரமாக அமல் படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். 

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவு அனைத்து மாநிலங்களிலும், வெளியாகும் செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிடப்பட்டதாக சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பரிந்துரைக்காத புத்தகங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தவேண்டும் என்றும், 2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் வழங்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை அனைத்து பள்ளிக்கூடங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தாத சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளின் உரிமத்தை இனி அந்தந்த மாநில அரசுகளே ரத்து செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு மத்திய அரசு வக்கீல் கூறினார்.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (நாளை) நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment