Sunday, October 21, 2018

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது - தமிழக முதல்வர் பதில்

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து கேட்ட கேள்விகளுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.   நிருபர்கள்  கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார் களே?.

பதில்:- ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பளக்குழு அறிவிக்கப்பட்டு ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் எல்லாம் அரசால் அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, இன்றைக்கு அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. நிதிநிலைக்கு ஏற்றவாறு, அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

கேள்வி:- ஏற்கனவே இருந்த ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று சொல்கிறார்களே?.

பதில்:- அது ஒரு மாநிலத்திலோ, இரண்டு மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

கேள்வி:- தேர்தல் வாக்குறுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த மாதிரி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்?.

பதில்:- நிதி ஆதாரம் இல்லையே, நிதி ஆதாரம் இருந்தால்தானே எல்லாம் கொடுக்க முடியும். தமிழகத்தின் 7-வது ஊதியக்குழு வகையில் ரூ.14,719 கோடி அதற்கு மட்டும் அரசு கூடுதலாக செலவழிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படியும் உயர்த்தியிருக்கிறார்கள். அதில் கிட்டத்தட்ட ரூ.1,200 கோடி வழங்கப்படுகிறது. இப்படி அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அரசால் தக்க உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா?.

பதில்:- அரசாங்கத்தின் நிதிச்சுமை குறித்து அரசு ஊழியர்களுக்கு முழுக்க முழுக்க தெரியும். ஏனென்றால், அவர்கள்தான் இந்த அரசாங்கத்தையே நடத்தக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றவர்கள். அரசாங்கத்தின் நிதிநிலைமை அவர்களுக்கு நன்றாக புரியும், அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி:- பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?.

பதில்:- ஏற்கனவே பலமுறை அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சகம் மற்றும் துறைச் செயலாளர் அழைத்து பேசுவார்கள்.

கேள்வி:- தமிழக முதல்- அமைச்சர் மட்டும் எங்களை அழைத்துப் பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்களே?.

பதில்:- கடந்த காலத்தில் சுமார் 2 வருடம் வரை அதை நீட்டித்துத்தான் வழங்கினார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதைப் புரிந்து, அ.தி.மு.க. அரசு அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்கி வருகிறது. அவர்கள் எந்தக் கோரிக்கை வைப்பதற்கு முன்னர் உடனே வழங்கியிருக்கிறோம்.

கேள்வி:- எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்...

பதில்:- நாட்டில் எல்லோருக்கும் கேட்க உரிமையுண்டு. இது ஜனநாயக நாடு, அந்த அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

நன்றி 

தினத்தந்தி

No comments:

Post a Comment