Thursday, April 25, 2019

தெரு விளக்கில் படித்து பிளஸ் 2வில் 524 மார்க்: 'நீட்'டுக்கு தயாராகும் நிதி இல்லாத மாணவி

மின்சாரம்   இல்லாமல், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து, பிளஸ் 2வில், 524 மதிப்பெண் எடுத்த மாணவி, 'நீட்' தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ளார். ஆயினும், மேற்படிப்புக்கு நிதியின்றி தவிக்கிறார்.தஞ்சாவூர், பேராவூரணி அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர், டெய்லர் கணேசன். இவரது மனைவி சித்ரா; கூலித்தொழிலாளி. இவர்களது மகள் சஹானா, 16, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், உயிரி கணிதவியல் பாடப் பிரிவில் படித்து, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 524 மதிப்பெண் எடுத்துள்ளார். சஹானா கூறியதாவது: நாங்கள் தென்னந்தோப்பு ஒன்றில், குடிசை வீட்டில், வாடகைக்குக் குடியிருக்கிறோம். தோப்பையும் சேர்த்து கவனிப்பது, எங்கள் வேலை  அப்பாவுக்கு போதுமான வருமானம் இல்லை. இன்னும் எங்கள் வீடு, மின்சாரத்தைப் பார்த்ததேயில்லை.காலையில் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில், தெருவிளக்கு வெளிச்சத்திலும் படிப்பேன். வீட்டுக்கு வந்து விட்டால், மின்சாரம் இல்லாமல் படிக்க முடியாது. அப்படியிருந்தும், 10ம் வகுப்பில், பள்ளி அளவில் முதலிடம் பெற்றேன்.

'கஜா' புயலால் எங்கள் வீடு சேதமானது. சிலரின் உதவியுடன், வீட்டைச் சீரமைத்தோம். எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், எனக்கு படிக்க நிறைய உதவிகள் செய்தார். பல கஷ்டங்களுக்கு இடையிலும், என்னை விடாமல் படிக்க வைத்தார் என் அப்பா.

இப்போது, 600க்கு, 524 மார்க் எடுத்துள்ளேன்.இதுவரை, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இருவர் நிதியுதவி அளித்துள்ளனர். டாக்டராக வேண்டும் என்பது ஆசை. 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து, தயாராகி வருகிறேன். ஆனால், போதுமான பண வசதி இல்லை. மேற்படிப்பை எப்படி தொடர்வது என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சஹானாவுக்கு உதவ விரும்புவோர், 82702 23022 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment