Friday, April 26, 2019

திருவள்ளூரை ஆட்டுவிக்கும் சொல்யூஷன் போதை சித்த பிரமையில் சிறுவர்கள் * அதிர்ச்சி தகவல்

திருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் புதுவகையான போதையில் சிக்கி மாணவர்கள், பள்ளி செல்லா
சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். சிலர் மரணத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் இறந்தும் உள்ளனர். எனவே, அவர்களை மாவட்ட நிர்வாகம் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவர்கள் புது வகையான போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். அது அரசை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக வேலை இல்லாத சிறுவர்கள், பெற்றோர் கவனிப்பின்றி சுற்றித்திரியும் சிறுவர்கள், குப்பை பொறுக்கும் சிறுவர்கள் தான் இந்த போதைக்கு அடிமையாகிறார்கள்.

இந்த போதை மருந்து சிறுவர்களின் நாடி, நரம்பு மண்டலங்களை அடியோடு சீர்குலைத்து அவர்களை குறைந்த வயதிலேயே உடல்நலம் குன்றியும் பைத்தியம் பிடித்த நிலைக்கும் தள்ளப்பட்டு, ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார்கள். இந்த புதுவித போதையை தடுக்க சில்லறை விற்பனையாளர்கள் சிறுவர்களுக்கு இந்த பேஸ்டை அளிப்பதை நிறுத்த வேண்டும் என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, '' செருப்பு மற்றும் பர்னிச்சர்கள் ஒட்டுவதற்கு பயன்படும் சொல்யூஷனே போதை பொருளாக சிறுவர்கள் மாற்றிக் கொள்கின்றனர். ஹார்டுவேர் கடைகளில் 50 மில்லி முதல் 5 லிட்டர் வரை கிடைக்கிறது. மேலும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படும் சொல்யூஷனும் போதைக்கு பயன்படுத்துகின்றனர். இதன் விலையும் மிகவும் குறைவு. 

இந்த சொல்யூஷன் மேல்மூடியை திறந்து மூக்கின் அருகே கொண்டு சென்று வேகமாக உறிஞ்சுகின்றனர். அப்போது சொல்யூசனில் இருந்து வெளியே வரும் ஒரு வித கெமிக்கல் வாசனை அதிவேகமாக மூளை வரை பாய்கிறது. அப்போது திடீரென கிக் ஏறி அடுத்த சில நிமிடங்களில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு தன்நிலையை மறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். திடீரென ஏற்படுவதால் இளைஞர்கள் சுயநினைவை இழுந்து தரையில் விழுந்து பாம்பு போல சுருள்கின்றனர்... கெமிக்கலின் வீரியம் குறைய குறைய அவன் சரியான நிலையில் படுக்க ஒரு மணிநேரம் வரை தேவைப்படுகிறது. அதுவரையும் அதன் பிறகும் என்ன செய்கிறோம். எப்படி இருக்கிறோம் என்பதே தெரியாது... சுமார் 8 மணிநேரத்துக்கு பிறகே செல்யூஷன் தாக்கம் குைறந்து நார்மல் நிலைக்கு வருகிறான். 
உருளை வடிவில் போைத: டப்பாவில் உள்ள சொல்யூஷனில் காற்று பட்டு அவை இறுகும் தன்மைக்கு செல்லும்போது, அவற்றை உருட்டி எடுத்து கைகளில் வைத்துக் கொள்கின்றனர். போதை குறையும்போது இறுகிய சொல்யூசன் உருளையை நுகர்ந்து பார்த்து மீண்டும் போதை இறங்க விடாமல் பார்த்துக்கொள்கின்றனர்.

இதேபோல் ஒயிட்னரை துணி மற்றும் கர்சீப்பில் கலந்து வைத்து கொண்டு சுவாசித்தும் போதை ஏற்றுகின்றனர். அரை லிட்டர் சொல்யூஷன் டப்பாவின் விலை ₹85. சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படும் சொல்யூஷன் விலை ₹10. குறைந்த விலையில் இவை கிடைப்பதால் இதை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக திருவள்ளூர் நகரில் பெரியகுப்பம் பகுதியில் ரயில் நிலையம் அருகே உள்ள சுடுகாடு, புட்லூர் செல்லும் சாலை ஆகிய பகுதியில் ஏராளமானோர் அமர்ந்து இந்த போதையை அனுபவிக்கின்றனர். எனவே, இந்த சொல்யூஷனை விற்பனை செய்வதில் வியாபாரிகள் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தால் தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

கை, கால்கள் செயலிழக்கும்
போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கெமிக்கல் கலந்த சொல்யூஷன் சுவாசிப்பதால் மூளையை பாதிப்படைய செய்கிறது. பின்னர் ரத்தத்தில் கிருமிகள் கலப்பதால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தொடர்ந்து உபயோகித்தால் மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் கை, கால் செயல் இழக்கும் அபாயம் ஏற்படும். இவர்களுக்கு வாய் மற்றும் மூக்கை சுற்றிலும் சிவப்பு நிறம் தோன்றும். கால்களில் புண் ஏற்படும். அடிக்கடி இருமல், சளி தொல்லை ஏற்படும். இவர்கள் கோபமாக பேசுவர். முன்னுக்கு பின் முரணாக பேசுவது போன்றவைகளை கொண்டு கண்டுபிடித்து விடலாம். இம்மாதிரியான அடையாளங்கள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் தகுந்த கவுன்சிலிங் அளித்து அவர்களை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். இம்மாதிரியான போதை பழக்கங்கள் வட மாநிலங்களில் அதிகமாக இருந்து, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பரவி வருவது வேதனைக்குரியது' என்றனர்.

No comments:

Post a Comment