மாநிலத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகளில் பகுதி நேர பி.இ.,- - பி.டெக்., படிப்புகளில் சேர 'ஆன்லைன்' விண்ணப்பப்பதிவு செயல்பாடு நடந்து வருகிறது.
ஜூன் 30ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கும் என கலந்தாய்வு செயலர் செல்லதுரை அறிவித்துள்ளார்.தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் ஆறு அரசு, மூன்று அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பகுதிநேர பி.இ., பி.டெக்., படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்லுாரிகளில் ஆறு பாடப்பிரிவுகளின் கீழ் 1,465 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ஆண்டுதோறும் கோவை சி.ஐ.டி., கல்லுாரி கலந்தாய்வு செயல்பாடுகளை ஒருங்கிணைந்து நடத்தும்.டிப்ளமோ படித்து குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பதுடன், இரண்டாண்டுகள் பணிபுரிபவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கல்லுாரிக்கும் பணிபுரியும் நிறுவனத்துக்கும் இடையில் 120 கி.மீ., க்கு அதிகமான தொலைவு இருப்பின், விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு 600, எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் www.ptbe-tnea.com இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கட்டணத்துக்கான வங்கி வரைவோலையை இணைத்து 'செயலர், பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை, சி.ஐ.டி., கல்லுாரி, அவிநாசி ரோடு, கோவை - 641 014'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கலந்தாய்வு செயலர் மற்றும் சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் செல்லதுரை கூறுகையில், ''ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவை ஜூன் 4 வரை மேற்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பம் ஜூன் 7க்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். ஜூன் 27ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 30ல் விதிமுறைகளின் படி கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment