Saturday, May 18, 2019

கல்வி சேனல் ஒளிபரப்பிற்காக 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு இணை இயக்குனர் நாகராஜமுருகன் தகவல்

"தமிழக கல்வித்துறை சார்பில் துவங்கப்படும் கல்வி சேனல் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவுற்று, 53 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு கேபிள் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது" என இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார்.
மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:மாநிலத்தில் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவேற்றப் பணிகள் 90 சதவீதம் முடிவுற்றது. இக்கல்வியாண்டு முதல் எமிஸ் மூலமே பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பள்ளி மற்றும் மாணவர் விவரம் தொடர்பான புதிய தகவல்களை தலைமையாசிரியர் அவ்வப்போது பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவரின் கற்றல் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் துவக்கவுள்ள கல்வி சேனல் பணிகள் நிறைவுற்றன. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் எட்டாவது தளத்தில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேவையான காட்சியரங்கு, ஒளிப்பதிவு கூடம் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் தயார் நிலையில் உள்ளன.இதன் மூலம் கற்றல் மற்றும் மாணவர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படும். காலை 5:30 மணிக்கு 'குறளின் குரல்' என்ற தலைப்பில் திருக்குறள் பற்றிய விளக்கவுரையுடன் நிகழ்ச்சி துவங்கி பாடங்கள் தொடர்பான அனிமேஷன் விளக்கப் படம், கல்வித்துறை முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும் 'நாள் குறிப்பு', உலக நிகழ்வை தொகுத்து வழங்கும் 'இந்த நாள் இனிய நாள்', சாதனை ஆசிரியர்களை கவுரவிக்க 'குருவே துணை' உட்பட 30 தலைப்புகளில் முதற்கட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படும்.அரசு செட்டாப் பாக்ஸில் 200வது சேனலாக உள்ளது. தமிழகத்தில் 53 ஆயிரம் அரசு பள்ளிகளிலும் இச்சேனலை மாணவர் பார்க்கும் வகையில் கேபிள் இணைக்கும் பணிகள் நடக்கின்றன. மாவட்டங்கள் தோறும் மீடியா ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே 23 ம் தேதிக்கு பின் சேனல் துவக்க விழா நடக்கும் என்றார்.மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உடனிருந்தார்.

No comments:

Post a Comment