Monday, June 3, 2019

கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு இடையே தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: விடுமுறையை நீட்டிக்க கோரிய பெற்றோர், ஆசிரியர்கள் வேண்டுகோள் நிராகரிப்பு

தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை, வெயிலின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள்,

பெற்றோர் வைத்த கோரிக்கையை அரசு நிராகரித்ததை அடுத்து, இன்று பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பருவமழையின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலத்தில் 6 முறை புயல் சின்னம் உருவாகியும், போதிய மழை பெய்யவில்லை. அதற்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கஜா புயலும் ஏமாற்றி, மழை கொடுக்காமல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்றுவிட்டது. அதற்கு பிறகு தமிழகத்தில் வெயில் மற்றும் வெப்பம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகள் வறண்டு போய்விட்டன. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி தண்ணீரும் சரியாக வந்து சேராத நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலும் தண்ணீர் இல்லை. புழல் ஏரியிலும் நீர் வறண்டு வருகிறது. இதனால் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதே போல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருவதால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை என்ற நிலை மாறி குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வெயில் மற்றொருபுறம் வாட்டி வதைத்து வருகிறது. காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில்ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடுமையான வறட்சி நிலவுவதால் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்றி பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுத்துள்ளன. ஆனால், புதிய பாடத்திட்டத்தின் படி உரிய காலத்தில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளதால் விரைவாக பள்ளிகளை திறந்து பாடங்களை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தனியாரையும், முன்னாள் பள்ளி மாணவர்களுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவையும் அடங்கியுள்ளது. கழிப்பிடங்கள் போதிய அளவில் இல்லாத நிலையில், கழிப்பிடம் இருக்கும் சில பள்ளிகளில் தண்ணீர் வசதியும் இல்லை. இதுபோன்ற சூழலில் தற்போது வறட்சியும் சேர்ந்துள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெயில் கால நோய்கள் வந்தால் எப்படி சமாளிப்பார்கள், பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லை என்றால் எப்படி எதிர்கொள்வார்கள் என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளனர். வெயிலின்தாக்கம் இன்னும் குறையவில்லை, மேலும் 5ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் அன்று பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக இருக்கிறது. பின்னர் 6,7 தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். அதற்கு8,9ம் தேதிகள் விடுமுறை நாளாக இருக்கிறது. அதனால் 10ம் தேதி பள்ளிகள் திறந்தால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றும் பெற்றோர் தெரிவித்தனர். மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறைக்கும், அரசுக்கும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசுஅதை நிராகரித்துவிட்டு, திட்டமிட்டபடி இன்று பள்ளிகளை திறக்கிறது. கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால், கடந்த ஒரு வாரமாக அனைத்து பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது. போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகள் தூய்மைப் பணியில் பல இடங்களில் பள்ளி மாணவர்களை கொண்டு தூய்மை செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதனால் எந்தபணிக்கும் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையல் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கும் இன்று காலையில் 9 மணிக்கு இறை வணகத்துடன் பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்க வேண்டும், அத்துடன் புதிய சீருடைகளுடன் மாணவர்கள் வரவேண்டும் எ்ன்றும் தெரிவித்துள்ளது. * உயர்நிலை,மேனிலைப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றுகள் இன்று முதல் வழங்கப்படுகிறது. * வேலை வாய்ப்பு அலுவலக ஊழியர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவும் செய்கின்றனர். இந்த பதிவு இன்று தொடங்கி 17ம் தேதிவரை நடக்கிறது. * ஒழுங்காக பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் ‘பயோ மெட்ரிக்’ முறை இன்று முதல் ஆசிரியர்களுக்கு நடைமுறைக்கு வருகிறது. * ஆசிரியர்கள் கண்டிப்பாக பயோ மெட்ரிக் முறையின் கீழ் விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாகிறது.

No comments:

Post a Comment