Friday, March 6, 2020

8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு? கல்வி துறை அதிகாரியால் திடீர் குழப்பம்

எட்டாம் வகுப்புக்கு, ஏப்., 2 முதல் பொது தேர்வு நடத்தப்படும்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்ட திருத்தத்தை பின்பற்றி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வி முன்னாள் செயலர், பிரதிப் யாதவ் அறிவித்திருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததால், பள்ளி கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையனே நேரடியாக தலையிட்டு, தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, பள்ளி கல்வி செயலராக இருந்த, பிரதீப் யாதவ், அதிரடியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், அரசு தேர்வு துறையின் இயக்குனராக உள்ள உஷாராணி, நேற்று முன்தினம் இரவு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய, அவசர சுற்றறிக்கை:தமிழகம் முழுவதும், வரும், ஏப்., 2 முதல், ஏப்., 9 வரை, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்து, பட்டியல் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றில் பொதுவான வினாத்தாள் பாதுகாப்பு மைய அதிகாரி மற்றும் கண்காணிப்பாளர்களை நியமித்து, அதன் பட்டியலை வரும், 13ம் தேதிக்குள், தேர்வு துறைக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொது தேர்வு குறித்து வந்த சுற்றறிக்கையால், முதன்மை கல்வி அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அரசாணை குறித்தே தெரியாமல், பொது தேர்வு நடத்தப்படும் என, தேர்வு துறை இயக்குனர் அறிவித்ததால், ஆசிரியர் சங்கங்களும், மற்ற அதிகாரிகளும், அமைச் சர், செங்கோட்டையனை தொடர்பு கொண்டனர்.இதை தொடர்ந்து, அமைச்சர் அலுவலகமும், பள்ளி கல்வி முதன்மை செயலரும், தேர்வு துறை இயக்குனர், உஷாராணியிடம் விசாரணை நடத்தி, திருத்திய சுற்றறிக்கை வெளியிட உத்தரவிட்டனர். இதையடுத்து, பொது தேர்வுக்கான சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டு, தனி தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment