Thursday, September 27, 2018

நவம்பர் 26-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

நவம்பர் 26-ந்தேதி ஊதியக்குழுவின் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளதுதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு சென்னை சேப்பாக்கம் அண்ணாகலை அரங்கில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ் முன்னிலை வகித்தார்.

மாநாட்டை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பலர் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

ஊதியம் வழங்கவேண்டும்

6-வது ஊதியகுழுவிலே தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500 குறைவாக பெறும்நிலை ஏற்பட்டது.

அதே போன்று 7-வது ஊதியக்குழுவில் மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.35,400 தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.20,600 வழங்கப்படுகிறது. எனவே அடிப்படை ஊதியத்திலே ரூ.14,800 குறைவாக பெறும்நிலை ஏற்பட்டது. இந்த ஊதிய இழப்பை சரிசெய்யக்கோரி கடந்த 9 வருடங்களாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும் தமிழக அரசு இதுவரை கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

அரசாணை எரிப்பு போராட்டம்

எனவே இனியும் காலதாமதம் இன்றி தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். அவ்வாறு தரவில்லை என்றால் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நவம்பர் 26-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்காத தமிழக அரசின் ஊதியக்குழுவின் அரசாணையை தீயிட்டு கொளுத்துகின்ற போராட்டத்தை நடத்துவது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி 

No comments:

Post a Comment