Saturday, October 13, 2018

பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்ற உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார். ஈரோடு  மாவட்டம் சென்னிமலை ரோட்டில் உள்ள காசிபாளையம் பணிமனையில் இன்று புதிதாக 5 பஸ்கள் இயக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி.  கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுற்றுச்சூழல்  துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆறு மாத காலத்திற்கு முன்பாகவே அனைவரையும் அழைத்துப் பேசி இருக்கிறார்கள். அதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையிலும் மிக விரைவில் அந்த பணிகளை மேற்கொள்ள  இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதை மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும்  என்று அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக் காலம் பொற்காலமாக அமைந்துள்ளது. மனித நேயத்தோடும் மக்களின் நலன் கருதி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் குறைந்த  கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு லாப நோக்கம் இல்லாமல் இந்த பணிகள் தொடர்ந்து செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

ஈரோடு மண்டலத்திற்கு மட்டும் 112 புதிய வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 51 வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் 56 வாகனங்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும்  5 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்கள் தேவையான  வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment