Saturday, December 29, 2018

கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று 5-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை
வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்ற உறுதியுடன் கடும்பனி, வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று 5-வது நாளாக தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.


ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதேபோல், சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைபாண்டியன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.

‘துப்புரவு பணியாளர்களுக்கான அடிப்படை சம்பளம் தான் தங்களுக்கு வழங்கப்படுகிறது’ என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நேற்று ஆசிரியர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு நூதன போராட்டத்தையும் நடத்தினார்கள்.

அரசு தரப்பில் 2 நாட்களுக்கு முன்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாமலும் போனது. அதன்பின்னர், தங்களுடைய கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:-

அமைச்சர் சென்னையில் இருப்பதாக கூறுகிறார் கள். ஆனால் இதுவரை எங்களை அழைத்து பேசவில்லை. எங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் இங்கிருந்து புறப்படமாட்டோம்.

உண்ணாவிரதம் இருந்ததில் 201 ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அங்கு இடம் இல்லாததால் இங்கு 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். எங்களுக்கு ஏதாவது நேரிட்டால் அதற்கு அரசு தான் முழு பொறுப்பு.

மனிதாபிமான அரசு என்றால் உடனடியாக அழைத்து பேசி அவர்கள் நிறைவேற்றுவதாக கூறிய எங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
clip

No comments:

Post a Comment