Sunday, December 2, 2018

மாற்றுத்திறனாளி ஆசிரியைக்கு வெகுதூர இடமாறுதல்: பள்ளிக்கல்வித்துறை ஆணை ரத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

104 கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியையை இடமாற்றம் செய்த தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.தாமரைச்செல்வி. மாற்றுத்திறனாளி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான், கடந்த 1997-ம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். கடந்த ஆகஸ்டு மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் கொற்கையில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன்.
இந்தநிலையில், அந்த பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால், என்னை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். மாற்றுத்திறனாளியான என்னை அருகில் உள்ள தாழஞ்சேரி உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்ய கோரினேன்.

ஆனால் நான் பணியாற்றி வந்த பள்ளியில் இருந்து 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியாத்தும்பூர் உயர் நிலைப்பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

என்னை பெரியாத்தும்பூருக்கு மாற்றம் செய்த அதிகாரி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தாழஞ்சேரி உயர் நிலைப்பள்ளிக்கு என்னை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இடமாறுதலில் உரிய சட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. மனுதாரரை விட பணியில் மூத்தவரான கண்ணகி என்பவர் தாழஞ்சேரி பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியை இடமாறுதலில் மாற்றுத்திறனாளியை விட சீனியாரிட்டிக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது தெரிகிறது. மனுதாரர் மாற்றுத்திறனாளி என்பதால் அவர் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து 104 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரியாத்தும்பூர் பள்ளிக்கு சென்று வருவது கடினமானது.

ஒரு பதவிக்கு ஒருவருக்கு மேல் விண்ணப்பித்திருந்தால் அதில் ஊனமுற்றவருக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தமிழக அரசின் ஆணை கூறுகிறது. மனுதாரர் விவகாரத்தில் இந்த ஆணை அமல்படுத்தப்படவில்லை. கவுன்சிலிங் என்ற பெயரில் மனுதாரருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.

எனவே, மனுதாரரை பெரியாத்தும்பூர் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை தாழஞ்சேரி அரசு உயர் நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து ஒரு வாரத்திற்குள் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment