ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
ஆசிரியர்கள் இன்றி, பூட்டப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், 'ஸ்டிரைக்'கை தீவிரப்படுத்துவது குறித்து, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு, இன்று கூடி, வியூகம் வகுக்க உள்ளது.'பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ, ஜன., 22 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது.போராட்டம் தொடர்வதால், அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளில், கல்வி கற்பித்தல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், பள்ளிகளில் பொது தேர்வு, செய்முறை தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் முடங்கியுள்ளன. ஆசிரியர்கள் வராததால், தொடக்கப் பள்ளிகள், செயல்படாமல் மூடப்பட்டுள்ளன.
அரசு அதிரடி
நிலைமையை சமாளிக்க, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில், அரசு முழுவீச்சில் ஈடுபட்டுஉள்ளது.ஆசிரியர் வேலையை பெற, முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் அலுவலகங்களில், ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
வேலை நிறுத்தம் தொடர்பான, பொது நல வழக்கை, ஜன., 23ல் விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'ஜன., 25க்குள் ஆசிரியர்கள், பணிக்கு திரும்ப வேண்டும்' என, உத்தரவிட்டு உள்ளது. எனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பணிக்கு இன்று திரும்ப வேண்டும் என, அரசு வலியுறுத்தி உள்ளது.இன்று பணிக்கு வரும் ஆசிரியர்கள் மீது, எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாது. அவரவர், அந்தந்த பணியிடங்களில் சேரலாம்.
இன்று பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலி பணியிடங்களாக கருதப்படும். உத்தேச காலி பணியிட பட்டியல் தயாரிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இந்தகாலக்கெடுவுக்கு பின், பணிக்கு வரும் ஆசிரியர்கள், துறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, வருவாய் மாவட்ட அளவிலான, காலி பணியிடத்தில் நியமிக்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை ஒருங்கிணைத்ததாக, 422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று பணிக்கு சேராத ஆசிரியர்களின் பணி யிடங்கள், காலியானதாக அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள், இன்று முதல் நியமிக்கப்பட உள்ளனர். அதனால், ஆசிரியர்கள் இன்றி, கிராமப்புறங்களில் பூட்டிக் கிடந்த பள்ளிகள் திறக்கப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு பாடம் நடத்த, ஏற்பாடுகள் செய்யப்படும்.
இன்று வியூகம்
'ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை அரசு அழைத்து, பேச்சு நடத்தி, போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும்' என, பல்வேறு அரசியல் கட்சிகள், சங்கங்கள், அரசை கோரி வருகின்றன .ஆனால், இதை காதில் வாங்காமல், அதிரடி நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இது, ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களை, அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. இதையடுத்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம், மதுரையில் இன்று நடக்கிறது.
நீதிமன்றமும், அரசும், கெடு விதித்துள்ள நிலையில், போராட்டத்தை கைவிடுவதா அல்லது தீவிரப்படுத்த, வியூகம் வகுப்பதா என, முக்கிய முடிவு, இன்று எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இன்று விசாரணைக்கு வர உள்ளது.
முதல்வருடன் தான் பேச்சு'
முதல்வர் பேச்சு நடத்தினால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம்' என, 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் தெரிவித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், உயர்மட்டக் குழு உறுப்பினர் செல்வம் கூறியதாவது:
பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 22 முதல் போராட்டம் நடத்துகிறோம். சம்பள உயர்வுக்காக, போராட்டம் நடத்தவில்லை.ஆசிரியர், அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை, பொய்யான தகவல்களுடன், அரசு வெளியிட்டுள்ளது. கைது நடவடிக்கை மூலம் அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. பேசித் தீர்ப்பதற்கு பதில், 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' என, மிரட்டுகிறது.
இது போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே சந்தித்துள்ளோம். மிரட்டலுக்கு யாரும் பணிய மாட்டார்கள். திட்டமிட்டபடி, இன்று மறியல் போராட்டம் நடக்கும். இது, வலிமையாகவும் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment