Sunday, March 31, 2019

தேர்தல்தோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் செல்லாமல் போகும் அவலம்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

தேர்தல் திருவிழாவை நடத்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் பலவும் செல்லாததாகும் அவலம் தேர்தல்தோறும் தொடர்கிறது.

2016 சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு, அதிமுக சார்பில்இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். இன்பதுரை பெற்ற வாக்குகள் 69,590. அப்பாவு பெற்ற வாக்குகள் 69,541. வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிபெற்றார்.
பறிபோன வெற்றி
அப்பாவுவுக்கு 610 தபால் வாக்குகள் கிடைத்திருந்தன. இதன்படி அப்பாவு வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால், 610 தபால் வாக்குகளும் செல்லாதவை எனஅறிவிக்கப்பட்டன. தபால் வாக்குகளில் உள்ள 13-ஏ படிவத்தில், வட்டார கல்வி அலுவலர், உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு மருத்துவர் போன்ற அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் கையொப்பம் பெற வேண்டும். ஆனால், அரசு ஊழியர்கள் பலரும், பட்டதாரி ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று அனுப்பி வைத்திருந்ததே அவை செல்லாமல் போனதற்கு காரணம்.  
இவ்வாறு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையின்போது ஏராளமான தபால் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்படுகின்றன. இத்தருணத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இடையே மோதல் ஏற்படும் அளவுக்கு நிலைமை விபரீதமாகி விடுகிறது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது தபால் வாக்குகளை சரிவர நிரப்பி, உரிய நபர்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் வகையில், அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.
பல கட்ட பயிற்சி
தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும் நிலையில், இவற்றோடு சேர்த்து தபால் வாக்குகளை எவ்வாறு செலுத்துவது, அதற்குரிய படிவங்களை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும்.
இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பால்ராஜ் கூறியதாவது: 
தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதல்கட்ட தேர்தல் பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் முதல் பயிற்சிவகுப்பிலேயே தபால் வாக்குகளுக்கான படிவங்களை பெற அனுமதி படிவம் 12 மற்றும் பணிபுரியும் வாக்குச் சாவடியிலேயே தங்களது வாக்கை செலுத்த அனுமதி கோரும்12-ஏ படிவம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. நாமக்கல்,தூத்துக்குடி மாவட்டங்களில் படிவம் 12 மட்டும் வழங்கியுள்ளனர். இதுபோல், மற்ற மாவட்டங்களிலும் படிவம் 12 மற்றும் 12-ஏ கொடுக்க வேண்டும்.
இந்த படிவங்களை பெறுவதற்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2, ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாகம் எண், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களுடன் பயிற்சிக்கு வருமாறு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம்.
சங்கம் தரப்பிலும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரு கிறோம் என்றார்.

நன்றி
தமிழ் இந்து நாளிதழ்

No comments:

Post a Comment