Sunday, May 5, 2019

மாநில அளவில் 39.98% மாணவர்கள் அரசு பள்ளிகளை நாடியவர்கள் அரசு பள்ளிகளில் சரியும் மாணவர் எண்ணிக்கை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் அம்பலம் தமிழகத்தில் பள்ளிகள் காட்சி பொருளாக மாறும் அபாயம்

தமிழகத்தில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்களைவிட மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியரை கொண்ட பள்ளிகள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளாகவே இருந்து வருகிறது. பள்ளிகள் தேர்வு முடிவுகளை வெளியிடும்போது மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தேர்ச்சி விகித அளவில் மட்டுமே பள்ளிகளின் தரம் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் பங்களிப்பு என்பது மிகமிக குறுகிய அளவில் சுருங்கி வருகிறது.

மாநில அளவில் 9.37 லட்சம் மாணவ, மாணவியர் இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியிருந்தனர். இதில் 8.92 லட்சம் பேர் வெற்றிபெற்றிருந்தனர். இதில் அரசு பள்ளிகளின் பங்களிப்பு என்பது மொத்தம் 5 ஆயிரத்து 609. இவற்றில் 3.74 லட்சம் பேர் எழுதியதில் 3.46 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஒட்டுமொத்த மாணவர்களில் 39.98 சதவீதம் ஆகும். 

ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகள் என்பது பெயரளவுக்கு மாறி வருகிறது. அதிலும் மிக குறைவான அளவில் மாணவ, மாணவியரை தேர்வுக்கு அனுப்பும் அரசு பள்ளி மாணவர்களை கொண்ட மாவட்டமாக குமரி மாவட்டம் இருந்து வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வில் இங்கு 23,749 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 4977 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள். இது மொத்த மாணவர்களில் 20.95 சதவீதம் ஆகும். 130 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். இது சராசரியாக ஒரு பள்ளிக்கே 38 மாணவர்கள் என்ற அளவில்தான் மாணவர்கள் பயில்கின்ற நிலை உள்ளது. தூத்துக்குடி 4883, பெரம்பலூர் 4294, சென்னை 2984, திருவாரூர் 7701, அரியலூர் 6212, கரூர் 5804, ஊட்டி 2755, தேனி 5311, ராமநாதபுரம் 5757 என்று குறைந்த எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்களை கொண்ட மாவட்டங்களாக உள்ளன.

அதே வேளையில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அதிகம் உள்ளது. இங்குள்ள 353 பள்ளிகளில் 29 ஆயிரத்து 527 பேர் அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். சேலம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் அதிக அளவிலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். இதனை போன்று பிளஸ் 2ல் குமரி மாவட்டத்தில் 5244 பேர் அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் ஆவர். மொத்தம் 23 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுதியதில் 22 சதவீதம் பேர் மட்டுமே அரசு பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஆவர். மாநில அளவில் 39.71 சதவீதமாக அரசு பள்ளி மாணவர்களின் பங்களிப்பு உள்ளது. மொத்தம் தேர்வு எழுதிய 8.42 லட்சம் பேரில் 3.34 லட்சம் பேர் அரசு பள்ளிகளில் உள்ளவர்கள் ஆவர். மாநில சராசரிக்கும், மாவட்ட சராசரிக்கும் உள்ள இடைவெளி குமரி மாவட்டத்தில் வெகுவாக அதிகரித்து வகிறது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுடன் ஒப்பிடுகையில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியவர்கள் அரசு பள்ளிகளில் குறைவாகவே உள்ளனர்.. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் உயரவில்லை. புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி தொடங்க திட்டமிட்ட பலரும் தற்போது பள்ளிகள் தொடங்கி வருகின்றனர். கடிவாளம் இல்லாத நிலையில் தனியார் பள்ளிகள் பெருகி வருவதால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் என்பது வரும் காலங்களில் காட்சி பொருளாக மாறிவிடும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment