Thursday, June 13, 2019

அரசு புத்தகங்களுக்கு வரவேற்பு தனியார் தயாரிப்புகளுக்கு, 'குட்பை'

புதிய பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டதால், அரசு புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. 
தனியார் நிறுவன புத்தகங்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை துவங்கி, தேர்வு முறை வரை, புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய நுழைவு தேர்வுகளுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சிகள் தரப்படுகின்றன.இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், 'சிலபஸ்' என்ற, பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்பட்டு வருகிறது. 2018 - 19ல், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில், பாடங்கள் இடம் பெற்றன.இந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான புத்தகங்களையும், அரசே தயாரித்து வழங்கியுள்ளது. 

அதனால், இந்த ஆண்டு, பெரும்பாலான தனியார் பள்ளிகள், தனியார் நிறுவனம் தயாரித்த புத்தகங்களை வாங்காமல், அரசு புத்தகங்களை வாங்கின.கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் பள்ளிகளில், அரசு புத்தகங்களை விட, தனியார் நிறுவன புத்தகங்களுக்கே அதிக மவுசு உண்டு. அரசு பாடப் புத்தகங்களில் தேவையான தகவல்கள் இல்லாததும், மொழி அறிவை வளர்க்கும் வகையில் உருவாக்கப்படாததும், இதற்கு காரணம்.ஆனால், இந்த முறை, பிற மாநில பாட புத்தகங்கள் மற்றும் சி.பி.எஸ்.இ., புத்தகங்களுக்கு சவால் விடும் வகையில், தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.புதிய பாடத்திட்ட தயாரிப்பு குழுவின், தலைமை பொறுப்பில் இருந்த உதயசந்திரன், ஒருங்கிணைப்பாளர் அறிவொளி, பள்ளி கல்வி முன்னாள் இயக்குனர் இளங்கோவன், தற்போதைய இயக்குனர் ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர்கள் பொன்.குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது.இவர்களின் முயற்சிக்கு, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் முழு ஒத்துழைப்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment