Saturday, June 8, 2019

வாகன விதிகளை மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து; மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை

'மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை கையாளாவிட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வியின் மெட்ரிக் பிரிவு இயக்குனர், கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து, பல முறை அறிவுறுத்தியும், பள்ளி நிர்வாகங்களின் கவனக்குறைவால், விபத்துக்கள் ஏற்பட்டு, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை ஏற்க முடியாது. போக்குவரத்து துறையில், பள்ளி வாகனத்தை முழு ஆய்வுக்கு உட்படுத்தி, உரிமம் வாங்கிய வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். உரிய காலத்திற்குள், தரச் சான்றை புதுப்பிக்க வேண்டும். வாகன காப்பீட்டையும், முறையாக புதுப்பிக்க வேண்டும்.

வாகனத்தின் முன்னும், பின்னும், 'பள்ளி வாகனம்' என, பெரிய எழுத்தில் எழுதியிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை, பள்ளி பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஜன்னல்களில் பாதுகாப்பு, 'கிரில்' கட்டாயம் தேவை. மஞ்சள் வண்ணம் பூசியிருக்க வேண்டும். புத்தக பை வைக்க, இருக்கைக்கு கீழ் இடவசதி செய்ய வேண்டும்; அவசரகால வழி இருக்க வேண்டும். படிக்கட்டுகளின் உயரம் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும்.

தகுதியான டிரைவர், உதவியாளர் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது. ஆசிரியர் நிலையில் உள்ள ஒருவர், வாகன பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக மாணவர்களை ஏற்றக் கூடாது. மாணவர்கள் ஏறும்போதும், இறங்கும் போது, வாகனத்தின் அருகில் அவர்கள் நிற்காமல், பாதுகாப்பை உறுதி செய்த பின், வாகனங்களை இயக்க வேண்டும். மாணவர்கள் இருக்கையில் அமர்ந்த பின், வாகனங்களை இயக்க வேண்டும். நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் நின்று, அவர்களை ஏற்றி, இறக்கக்கூடாது. மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து, வீட்டுக்கு சென்றதை, பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இதில், கவனமின்றி நடந்தால், பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை சரியாக வாகனத்தில், ஏற்றி, இறக்கி, பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களில் பிரச்னை இருந்தால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிகளுக்கு அனுப்பி, 'விதிகளை பின்பற்றாவிட்டால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து உட்பட, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment