Monday, July 8, 2019

இன்ஜினியரிங், மருத்துவம் கவுன்சிலிங் இன்று துவக்கம்

இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. இதில், ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 

அதேபோல, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான மருத்துவ கவுன்சிலிங்கும், இன்று துவங்குகிறது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் இன்ஜினியரிங் கவுன்சிலிங் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக தொழில்நுட்ப கல்வி துறை வழியே, இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நேரடியாகவும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியிலும் நடத்தப்படுகிறது. இதில், சிறப்பு பிரிவு கவுன்சிலிங், ஏற்கனவே முடிந்து விட்டது. 

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கைகள், 3ல் துவங்கியுள்ளன. இதில், 1.72 லட்சம் இடங்களுக்கு, ஒரு லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம், நான்கு சுற்றுகளாக நடக்கும் கவுன்சிலிங்கில், முதல் சுற்றில், 178 முதல், 200 மதிப்பெண், 'கட்ஆப்' வரை உள்ள, 9,872 பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கான விருப்ப பாடம் மற்றும் கல்லுாரி பதிவு, இன்று துவங்குகிறது. வரும், 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், www.tneaonline.inஎன்ற இணையதளத்தில், மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.அவர்களுக்கான உத்தேச ஒதுக்கீடு, 11ல் வெளியிடப்படும். 

அதை, 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். வரும், 13ல், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும். இறுதி ஒதுக்கீட்டில் இடம்பெறாத கல்லுாரிகள் மற்றும் அவற்றின் இடங்கள், ஜூலை, 13ல் துவங்க உள்ள, இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கின், விருப்ப பதிவில் காலியிடங்களாக சேர்க்கப்படும்.மருத்துவம்இதற்கிடையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும், இன்று துவங்குகிறது. இன்று, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 
நாளை காலை, 9:00 மணிக்கு, பொது பிரிவினருக்கான ஒதுக்கீடு துவங்குகிறது. இன்ஜி., காலியிடம் அறிவிப்புஇன்ஜினியரிங் விருப்ப பதிவு, இன்று துவங்கும் நிலையில், ஒவ்வொரு கல்லுாரியிலும், பாடப்பிரிவு வாரியாக, ஜாதி வாரியான ஒதுக்கீட்டில், எத்தனை இடங்கள் உள்ளன என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை, www.tneaonline.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தங்கள் பிரிவுக்கு எத்தனை இடங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு, தங்கள் தரவரிசையையும் கணித்து, விருப்ப பதிவு செய்யலாம். விருப்ப பதிவில், எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஆனால், தரவரிசை மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் அளித்துள்ள முன்னுரிமைப்படி, இடங்கள் ஒதுக்கப்படும்.

No comments:

Post a Comment