Thursday, January 16, 2020

சமூக அறிவியல் வினாத்தாளில் மாற்றம்: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சரியும்?

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் வடிவமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்தால், அரசு
பள்ளிகளில் தேர்ச்சி விகிதம், பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதில், சமூக அறிவியல் பாடம், இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, 500 பக்கங்களுக்கு அதிகமான புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாண்டு தொடக்கத்தில், வினாத்தாள் மாதிரி அடிப்படையில், காலாண்டு தேர்வு நடந்தது. அரையாண்டு தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டது. ஒரு மதிப்பெண் வினாக்களில் 'பொருத்துக' பகுதிக்கு, 10 மதிப்பெண், தலைப்பின் கீழுள்ள வினாக்களுக்கு பதிலளிக்கும் பகுதிக்கு, 8 மதிப்பெண் ஆகியவற்றுக்கு பதில், விரிவான விடையளித்தல், கட்டாய வினா பகுதிகளில், வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதனால் அரசு பள்ளிகளில், அரையாண்டு தேர்வில், 50 சதவீதத்துக்கு மேலான மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை.

தேர்வில் தவறுதலாக கேட்கப்பட்டிருக்கலாம் என, ஆசிரியர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், அரசு தேர்வுத்துறை இயக்குனர், 'அரையாண்டு தேர்வு அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்தப்படும்' என அறிவித்துள்ளார்.இதுகுறித்து சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிச மாணவர்களுக்கு, பொருத்துக உள்ளிட்ட பகுதிகள் கைகொடுத்தன. பொதுத்தேர்வுக்கு இரு மாதமே உள்ள நிலையில், வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதால், அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்துவதும் கடினம். இதனால் நடப்பு கல்வியாண்டில், தேர்ச்சி விகிதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஏற்கனவே வெளியிட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில், பொதுத்தேர்வு நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment