Sunday, October 28, 2018

அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. சாத்தியமா?

தமிழகத்தில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. à®…ரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. சாத்தியமா?பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு தனியார் பள்ளிக்கூடங்களை கலங்க வைத்தது. அதே நேரம் அரசு பள்ளிக்கூடங்கள் மகிழ்ச்சியில் திளைத்தன. இதுபற்றி பேசிய அரசு பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் அரசு பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 வகுப்புகள் முழுமையாக முடிக்கப்படுகின்றன. எனவே எங்களுக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்கள். ஆனால் தனியார் பள்ளிக் கூடங்களில் பிளஸ்-2 பாடங்கள் மட்டுமே பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு எடுக்கப்பட்டு வந்ததாகவும், பிளஸ்-2 பாடத்தையே 2 ஆண்டுகள் படித்து பொதுத்தேர்வில் பங்கேற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்தது. 2 ஆண்டுகள் ஒரே பாடத்தை படித்தும், பொதுத்தேர்வில் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை விட ஓரிரண்டு மதிப்பெண்கள் மட்டுமே பெற்று முதலிடம் என்ற வெற்றியை தனியார் பள்ளிக்கூடங்கள் தக்க வைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு என்கிற போது தனியார் பள்ளிக்கூடங்களும் பிளஸ்-1 வகுப்பில் கவனம் செலுத்த வேண்டியது ஆனது. எனவே பிளஸ்-2 வில் பொதுத்தேர்வை சந்திப்பது என்பது சற்று சவாலாகவே இருந்தது. காரணம் தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக மதிப்பெண் என்ற தாரக மந்திரத்தை வைத்தே மாணவ-மாணவிகளையும், அதைவிட அவர்களின் பெற்றோரையும் கவர வேண்டியது உள்ளது.ஆனால் மதிப்பெண்கள் முறை ஒழிக்கப்பட்டு ‘ரேங்க்’ முறையை கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இது இன்னும் மாணவ-மாணவிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. இனி முதல் மதிப்பெண் என்று பேட்டிக்கொடுத்துக்கொண்டு யாரும் நிற்க மாட்டார்கள் என்பதே அவர்களின் மகிழ்ச்சியாக இருந்தது.

தேர்வு முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றம் போன்று, பாடத்திட்ட முறையிலும் கொண்டு வரப்பட்ட மாறுதல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு துறைகளின் நிபுணர்கள் குழுவினர் வடிவமைத்த இந்த பாடத்திட்டம் கணினியும் மட்டுமின்றி செல்போன் யுகத்துக்கும் பொதுவாகவே தயாரிக்கப்பட்டது. செல்போன்களை பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வராதே என்று கூறிய காலம் போய், செல்போன்கள் மூலமாகவே படிக்க முடியும் என்று நவீன தொழில் நுட்பத்தை அறிமுகப் படுத்தியது தமிழக பள்ளிக்கல்வித்துறை. விரைவுக்குறியீடுகள் மூலம் பாடத்தை செல்போன்களிலும், கையடக்க கணினியாக விளங்கும் ‘டேப்லட்’களிலும் படிக்க முடியும், அதுவும் பாடத்தை இசைவுப்பாடமாக படிக்க முடியும் என்பது மிகச்சிறந்த மாற்றமாக கருதப்பட்டது. வரும் கல்வி ஆண்டு முதல் பெரும்பாலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வந்து விடும். தமிழக பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்து விடும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதற்கிடையே பிளஸ்-1 மதிப்பெண்கள் உயர் கல்விக்கு முக்கியம் இல்லை என்று வெளிவந்த ஒரு அறிவிப்பு தனியார் பள்ளிக்கூடங்களை குதூகலிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. பிளஸ்-1 மதிப்பெண்கள் முக்கியமற்றவையாக இருக்கும்போது, மீண்டும் பிளஸ்-2 பாடத்தை மட்டுமே 2 ஆண்டுகள் கற்பிக்கப்படும் நிலை ஏற்படும். இப்போதும் கூட பல தனியார் பள்ளிக்கூடங்களில் அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாடத்திட்ட புத்தகங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. தொடக்கப்பள்ளியில் இருந்தே தமிழ் பாடம் மட்டுமே பெரும்பாலான பள்ளிக் கூடங்களில் சமச்சீர் கல்வி திட்ட பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. கணிதம், அறிவியல், சமூகவியல், சுற்றுசூழலியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களாகவே உள்ளன. இதற்காக மாணவ-மாணவிகளிடம் இருந்து தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். அதை உறுதிப் படுத்தும் வகையில் கடந்த விஜயதசமி தினத்தில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கையும் அரசு பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்க ஆர்வமாக இருந்தாலும், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளிக்கூடம் தேர்ந்து எடுக்கப்பட்டு முதல் கட்டமாக அந்த பள்ளிக்கூடங்களில் மட்டுமே எல்.கே.ஜி. தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது. விஜயதசமி சேர்க்கை முடிந்து 2-வது நாளில் கூட எத்தனை மாணவர்கள் விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிக்கூட எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர் என்ற புள்ளிவிவரம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கே வழங்கப்படவில்லை என்பதே அதிகாரிகளுக்கு ஆர்வம் இன்மையை காட்டுகிறது.

இது இப்படி இருக்க, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளை அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

அங்கன்வாடி மையங்களை பொறுத்தவரை ஒரு மையத்துக்கு குறைந்த பட்சம் 15 முதல் 20 குழந்தைகள் வரை இருக்க வேண்டும் என்பதை கட்டாய கணக்காக வைத்து இருக்கிறார்கள். அரசின் பதிவேடுகளில் இந்த கணக்குதான் இருக்கும். ஆனால் உண்மையில் 5 முதல் 10 வரையான குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களுக்கு வருகிறார்கள். அதுவும் 3 வயது நிரம்பாத குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்க ஒரு பயிற்சி மையமாகவே அங்கன்வாடி மையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டாலும், சுகாதாரமற்ற பராமரிப்பு, கல்வி கற்பித்தல் இல்லாத நிலை குழந்தைகள் வருவதை தடை செய்வதாக இருக்கிறது. ஆர்வம் கொண்ட பணியாளர்கள் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் புள்ளிவிவர சேகரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுமையை ஏற்படுத்துவதால் அங்கன்வாடி மாணவர் சேர்க்கை பதிவு ஏடுகளில் நிஜ எண்ணிக்கையை விட கூடுதலாக எண்ணிக்கை இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே அங்கன்வாடி மையங்களை எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளாக மாற்றி, அந்த மையங்களை அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிக் கூடங்களுடன் இணைத்து, அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து ஆசிரியர்களாக மாற்றி, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் மட்டுமே பணி என்கிற நிலை ஏற்படுத்த வேண்டும். இல்லா விட்டால் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. என்பது சாத்திப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.

-முடிவேல் மரியா

No comments:

Post a Comment