Saturday, December 1, 2018

தலைநகர் டில்லியை அதிர வைத்த விவசாயிகளின் பிரமாண்ட பேரணி

விவசாய கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட, 24 மாநிலங்களைச் சேர்ந்த, விவசாயிகள், டில்லியில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

பருவநிலை மாற்றம், பெருவெள்ளம், கடும் வறட்சி, பூச்சி பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், தங்கள் வாழ்வாதாரம் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 'வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

'விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்; நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர், டில்லியில் நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர்.அதன் படி, ராம் லீலா மைதானத்தில்,ஒன்று கூடிய விவசாயிகள், நேற்று காலை, பார்லிமென்டை முற்றுகையிடும் நோக்கத்துடன் பேரணியாக சென்றனர்.

தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 24 மாநிலங்களைச் சேர்ந்த, 35 ஆயிரம் விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்றனர்.டில்லியில் உள்ள, ஐந்து குருத்வாராக்கள், இந்த விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தன. விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் துறை ஊழியர்கள், கல்லுாரி, பல்கலை மாணவர்கள் என, பல தரப்பினரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, 3,500 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர். பார்லிமென்ட் சாலையில் உள்ள காவல் நிலையத்தை நெருங்கிய போது, அங்கிருந்த போலீசார், பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.அப்போது, போலீசாருக்கும், விவசாயி களுக்கும் இடையை லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின், விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை கோஷங்களாக முழங்கினர். இதனால், டில்லி பார்லிமென்ட் சாலையில் நேற்று பரபரப்பான சூழல் காணப்பட்டது.

அனைத்து அரசியல் கட்சியினரும், நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். விவசாயிகள், தங்கள் உரிமையைத் தான் கேட்கின்றனரே தவிர, மத்திய அரசிடம் இருந்து, இலவச பரிசுப் பொருட்களை கேட்கவில்லை. நாட்டில், 15 மிகப் பெரிய தொழில் அதிபர்களின், 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்ய முடியும் போது, விவசாயிகள் வாங்கிய கடனை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது?
ராகுல், தலைவர், காங்கிரஸ்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. வேளாண் விஞ்ஞானி, எம்.எஸ்.சுவாமிநாதனின் அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல், விவசாயிகளை, இந்த அரசு ஏமாற்றிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், வரும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு, அவர்கள் தக்க பாடம் புகட்டுவர்.

அரவிந்த் கெஜ்ரிவால்டில்லி முதல்வர், ஆம் ஆத்மி கட்சி
வித்தியாசமான போராட்டம்!


இந்த போராட்டத்தில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து வந்த விவசாயிகள், டில்லி வந்திறங்கியவுடனே, போராட்டத்தை துவங்கி விட்டனர். ரயில்வே ஸ்டேஷனில், ரயில்களை மறிக்க கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின், ஜந்தர் மந்தர் பகுதியில், ஏராளமானோர் குவிந்து, கோஷங்கள் எழுப்பினர்.

பல இடங்களில்,சாலையில் படுத்தும், உருண்டு புரண்டும் கோஷங்கள் எழுப்பியதை காண முடிந்தது. மற்ற மாநில விவசாயிகள், சாதாரணமாக வந்திருந்தனர். தமிழக விவசாயிகள் மட்டும், விளைநிலத்தில் எவ்வாறு இருப்பரோ, அதே கோலத்துடன் வந்ததால், பலரது கவனத்தையும் ஈர்த்தது. 


கைகளில் செடிகள், கழுத்தில் மண்டை ஓடு எலும்புகள் என வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர். 'நிர்வாணமாக ஓடுவோம்' என, அறிவித்து இருந்ததால், போலீசார் கண்காணிப்புடன் இருந்தனர். சில விவசாயிகள், நிர்வாணமாக தரையில் உருண்டனர்.

No comments:

Post a Comment