வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும்
என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ரமணமுதலிபுதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சினேகலதா (வயது 40) என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அங்கு பணிக்கு வந்த சில ஆசிரியர்களை போராட்டத்துக்கு சென்று ஆதரவு அளியுங்கள் என்று தூண்டும் வகையில் தலைமை ஆசிரியை சினேகலதா பேசினார்.
இதனை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டார். அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை சினேகலதாவை பணியிடை நீக்கம் செய்தனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 10 பேரை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர்.
திருச்சியில் மறியலில் ஈடுபட்ட 645 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 ஆசிரியர்களும், புதுக்கோட்டையில் கைதான 14 ஆசிரியர்களும், கரூரில் 14 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், தஞ்சையில் 10 பேரும், திருவாரூரில் 5 பேரும், நாகையில் 4 பேரும், நாமக்கல்லில் 57 ஆசிரியர்களும், சேலத்தில் 17 பேரும், தர்மபுரியில் 19 பேரும், கிருஷ்ணகிரியில் 36 பேரும், விருதுநகரில் 35 பேரும், ராமநாதபுரத்தில் 18 பேரும், கடலூரில் 12 பேரும், விழுப்புரத்தில் 20 ஆசிரியர்களும், ஈரோட்டில் 20 ஆசிரியர்களும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment