Sunday, January 27, 2019

'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது!'

 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, நிதி நெருக்கடி காரணமாக, அரசால் நிறைவேற்ற முடியாது. எனவே, செயல்படுத்த முடியாத, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட
வேண்டாம்.'அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.போராட்டம்அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் அறிக்கை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் கோரிக்கைகளை, அரசால் செயல்படுத்த இயலாது. இதை தெரிவித்த பிறகும், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், 22 முதல், காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றன.உலகில், 174 நாடுகளும், இந்தியாவில், மேற்கு வங்கம் தவிர, பிற மாநிலங்களும், மத்திய அரசும், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, புதிய பங்களிப்பு திட்டத்தை அமல்படுத்தி உள்ளன.பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி இல்லாமல் போகும். கடன் பெற்றுத் தான், சம்பளமும், ஓய்வூதியமும் தர வேண்டிய நிலை ஏற்படும். இதை, அரசு ஊழியர்களும் அறிவர்.பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராய அமைத்த குழு, 'அந்த திட்டத்தை அமல்படுத்தினால், அரசு பெறும் வரி வருவாயை விட கூடுதலாக, சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவு செய்ய வேண்டி வரும்' என, தெரிவித்துள்ளது.எனவே, பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையை ஏற்க இயலாது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கியதால், அரசுக்கு ஆண்டுக்கு, 14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இதனால், அரசின் வருவாய் பற்றாக்குறை, 2017 - 18ம் ஆண்டில், 21 ஆயிரத்து, 594 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த ஆண்டு, வருவாய் பற்றாக்குறை, 24 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.இதை, வெளிச்சந்தையில் கடன் பெற்று தான், அரசு செலவு செய்கிறது. இந்நிலையில், ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்றால், 20 ஆயிரம் கோடி ரூபாய், கூடுதலாக நிதி தேவைப்படும். இதையும், அரசு கடன் பெற்றுத் தான் வழங்க முடியும்.கூடுதல் கடன் சுமையை சமாளிக்க, மக்கள் மீது கூடுதல் வரிச் சுமையை திணிப்பது, ஒன்றே வழியாகும். இதை, அரசு தவிர்க்க விரும்புகிறது. எனவே, நிலுவைத் தொகை கோரிக்கையையும் ஏற்க இயலாது.மத்திய அரசில், இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவு; மாநில அரசில் அதிகம். இதே கல்வித் தகுதியில், பிற அரசுப் பணிகளிலும், அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும், ஊதிய உயர்வு தர இயலாது.அதிக சம்பளம்இதுபோல் செயல்படுத்த முடியாத, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபடும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பிற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும், அதிக சம்பளம் பெறுகின்றனர். இதை, நடுநிலையான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அறிவர்.ஆனால், சிலர், சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தங்கள் பிரச்னைகளை அரசியலாக்குவதற்காகவும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் துாண்டிவிட்டு, தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.மேலும், 5,000 அரசு பள்ளிகளை மூடுவதாகவும், 3,500 அரசு பள்ளிகளை இணைப்பதாகவும், தவறான கருத்துகளை, மக்கள் இடையே பரப்புகின்றனர். இவர்களின் உள்நோக்கத்தை புரிந்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், விழிப்போடு இருக்க வேண்டும்.மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு செல்லாமல், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியான, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறியுள்ளார்.முதல்வர் வீட்டில் அவசர ஆலோசனை!அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக, நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையில், அவரது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்து வெளியே வந்த, அமைச்சர் செங்கோட்டையன், ''ஆசிரியர்கள் போராட்டம் விவகாரத்தில், தமிழக அரசு, விரைவில் தன் முடிவை அறிவிக்கும்,'' என்றார். அதன்பின், சிறிது நேரத்தில், 'கோரிக்கையை நிறைவேற்ற இயலாது' என்ற, அமைச்சர் ஜெயகுமாரின் அறிக்கை வெளியானது.

No comments:

Post a Comment