Tuesday, September 17, 2019

950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம்

அரசு மேல்நிலை பள்ளிகளில் 500, உயர்நிலை பள்ளிகளில் 450 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நிர்வாக பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், மேல்நிலை பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் ஆசிரியர் பணியிடமும் காலியாகும். தமிழகத்தில் உள்ள 31 ஆயிரத்து 720 தொடக்க, நடுநிலை பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளோடு இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தலைமை ஆசிரியரின் கீழ் குறைந்தபட்சம் 15 பள்ளிகள் இணைக்கப்படும். தலைமை ஆசிரியர் 'பள்ளி முதல்வர்' என அழைக்கப்படுவர் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் பள்ளிகளை ஆய்வு செய்தல், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை கண்காணித்தல், மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியதாவது:பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. காலாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இல்லாமல் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நிர்வாக ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்பும் கலந்தாய்வு தேதியை அரசு அறிவிக்க வேண்டும். மாணவர்களுக்கு நலத்திட்டங்களை தடையில்லாமல் வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment