Monday, April 29, 2019

பொதுத்தேர்வில் வெகுவாக குறைந்த தேர்ச்சி விகிதம்..165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை: உ.பி.யில் அவலம்!

உத்தரப்பிரதேச மாநில பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக
குறைந்த நிலையில், 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பொதுத்தேர்வு முறைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுவது உண்டு. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், 388 பள்ளிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில், புத்தகத்தை வைத்து காபி அடிக்க அனுமதி வழங்கிய போது 100 சதவீத தேர்ச்சி அடைந்த கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த 13 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், 10ம் வகுப்பை பொருத்தவரை 50 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 84 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 12ம் வகுப்பை பொருத்தவரை 15 அரசுப் பள்ளிகளும், 58 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இதேபோல மேல்நிலைப் பள்ளி தேர்வில் அலிகார், மற்றும் மணிபூரில் தலா 7 பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் பூஜ்ஜியமாக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள உத்தரப்பிரதேச பள்ளிக்கல்வி இயக்குநர் வினய் குமார், பள்ளி தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார். இதன், விளைவாகவே மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாகவும், உ.பி.,யின் கல்வித் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment